×

10 ஆண்டு அலட்சிய அதிமுக அரசு புதர் மண்டிய கோரையாறுகள்-முத்துப்பேட்டை பகுதி விவசாயிகள் வேதனை

முத்துப்பேட்டை : திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றிய விவசாய நிலங்களுக்கு கோரையாறு, மறைக்கா கோரையாறு, கிளந்தாங்கி ஆறு, வளவனாறு மற்றும் பாமணியாற்றின் மூலம் நீர்ஆதாரம் கிடைக்கிறது. இதன்மூலம் சுமார் 13ஆயிரத்து 323 எக்டேர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் குறிப்பாக கோரையாற்று வழித்தடம் திருவாரூர் மாவட்டத்தில் நாணலூரில் துவங்கி தேவதானம், வீரன்வயல், ஜாம்புவானோடை உள்ளிட்ட பகுதிகளில் நீரைத்தேக்கி பகிர்ந்தளிக்க பாசன ரெகுலேட்டர்களும் பயன்பாட்டில் உள்ளன. உப்பூர் மரைக்காகோராறு பகுதியில் தடுப்பணைகளும் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில் நாணலூர் முதல் கடைமடை வரையிலும் சுமார் 13 கி.மீ. நீளமுள்ள கோரையாறு மற்றும் மறைக்காகோரையாறு 10 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் மண்தூர்ந்து கிடக்கின்றன. ஆகாயத்தாமரை, வேலிகாட்டாமணக்கு செடிகளும் மண்டியுள்ளதோடு கருவேலமரங்களும் ஆற்று நீரோட்டத்தை தடைசெய்கின்றன. இதில் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், ஆறுகள் நெடுகிலும் படர்ந்து கிடக்கிறது. இவைகள் அனைத்தும் ஆற்றுநீரில் அடித்து சென்று கடலில் கலந்து மிகப்பெரிய மாசுப்படுத்தி மீன் வளத்தை அழித்து வருகிறது. மேலும் கோரையாறு மற்றும் மறைக்காகோரையாற்றின் கிளை வாய்க்கால்களும் முட்புதர் மற்றும் மண்திட்டுக்களாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஆக்கிரமிப்பில் சுருங்கி விட்டன.

கிளை ஆறுகளான பழம்பாண்டியாறு, புதுபாண்டியாறு, தோலி, தேவதானம் வாய்க்கால், கும்மட்டிதிடல், பள்ளியமேடு, வேதநாயகம் செட்டிவாய்க்கால், தில்லைவிளாகம் பட்டிமார் வாய்க்கால், வீரன்வயல் முசவெளி, ஐஎன்ஏ வடிகால் வாய்க்கால்களும் தூர்ந்து கிடக்கின்றன. அதே நேரத்தில் ஆற்றில் அதிகளவு தண்ணீர் வரும் நேரத்தில் நீர் தேங்கி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சுற்று பகுதி கிராமங்கள் மூழ்கும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேட்டூரிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை பகுதியான இவ்வழியாக சென்றுதான் சுமார் 5கி.மீ. தூரத்தில் உள்ள கடலுக்கு சென்று சேர வேண்டும். ஆனால் இந்த மறைக்காகோரையாறு தடுப்பணையிலிருந்து பல கி.மீ. தூரத்திற்கு ஆறுகள் தூர் வாரப்படாததால் ஆற்றின் நெடுவெங்கும் கருவை காடுகள் மண்டி ஆங்காங்கே புதர்களாக காணப்படுகிறது.

இதுகுறித்து இப்பகுதி மக்களும் விவசாயிகளும் கடந்த 10ஆண்டுகளுக்கு மேலாக இப்பகுதியை தூர் வாரி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் 10ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை. தற்போது தமிழகத்தில் சிறப்புடன் ஆட்சி செய்து வரும் திமுக அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தில்லைவிளாகம் முன்னோடி விவசாயி பாலகிருஷ்ணன் கூறியதாவது:

இடும்பாவனம் – தில்லைவிளாகம் பகுதியில் செல்லும் மறைக்காகோரையாறு முழுவதும் கருவை புதர்கள் மண்டி நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தியுள்ளது. அதே இடத்தில் ஆகாயத்தாமரை செடிகளும் படர்ந்துள்ளது. இதனால் நடப்பாண்டு தண்ணீர் இப்பகுதியை கடந்து செல்லுமா சந்தேகம் எழுந்துள்ளது இதன் மூலம் இப்பகுதி விவசாயம் பெருமளவில் பாதிப்பு ஏற்படும். இப்பகுதியில் உள்ள இடும்பாவனம் அணை நூற்றாண்டுகளை கடந்தது. அது தற்போது சிதிலமடைந்துள்ளது சரியான பராமரிப்பு இல்லை. இதுவே ஆற்றின் கடைசி அணையாகும். அணைக்கு தென்பகுதியில் கருவை காடுகள் மண்டி ஆக்கிரமித்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post 10 ஆண்டு அலட்சிய அதிமுக அரசு புதர் மண்டிய கோரையாறுகள்-முத்துப்பேட்டை பகுதி விவசாயிகள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Shrub ,Mandarayals ,Muthupupetat ,Thiruvarur District ,Thirupapetta ,Union Farming Land ,Mudhika Korayarai ,Clanthangi Six ,Vilavarai ,Canadies ,
× RELATED திருமயம் அருகே புதர் மண்டி கிடக்கும் அரசு ேபாக்குவரத்து பணிமனை வளாகம்